மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது.
அமைவிடம்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.
வரலாறு
மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 21 ஜனவரி1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது.
மேகாலயா பகுதியை பொ.ஊ. 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் காலத்திற்கு முன்பு வரை காஸி, காரோ, ஜெயின்டியா ஆகிய பழங்குடியினர் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டு இருந்தன. பின்னர், பிரித்தானியர் 1835 இல் மேகாலயாவை அசாமுடன் இணைத்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மேகாலயப் பகுதி அரை சுயாட்சி உரிமையைக் கொண்டதாக இருந்தது. கர்சன் பிரபு காலத்தில் 16 அக்டோபர் 1905 இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினையின்போது, மேகாலயாவானது புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், வங்கப்பிரிவினை திரும்பப்பெறப்பட்ட 1912 இன் போது, மேகாலயா அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது.
1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. 1960 இல் தனி மலை மாநில இயக்கம் தொடங்கப்பட்டது.[6] அசாம் மறு சீரமைப்புச் (மேகாலயா) சட்டம் 1969 இன்படி மேகாலயா பகுதி சுயாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஆனது. இச்சட்டம் 1970 ஏப்ரல் 2 இல் அமலுக்கு வந்து, இதன்பிறகு அசாமிலிருந்து மேகாலயா என்னும் தன்னாட்சி மாநிலம் பிறந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்கு ஏற்ப மேகாலயா தன்னாட்சிப் பகுதியில் 37 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது.
1971-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் 1971 நிறைவேற்றப்பட்டது, இதன்பிறகு மேகாலயா சுயாட்சிப் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு, 1972 சனவரி 21 அன்று மாநிலமாக ஆனது.[6]
புவியியல்
மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
பண்பாடு
பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர்.
தீவிரவாத பிரச்சனைகள்
மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,966,889 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.93% மக்களும், நகரப்புறங்களில் 20.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,491,832 ஆண்களும் மற்றும் 1,475,057 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். 22,429 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 132 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.43 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.95 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.89 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 568,536 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 342,078 (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 130,399 (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,213,027 (74.59 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,045 (0.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 627 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 9,864 (0.33 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 258,271 (8.71 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 9,578 (0.32 %) ஆகவும் உள்ளது.
இனக் குழுக்கள்
இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் 7,633 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளது. மேகலயாவின் தலைநகரம் சில்லாங், அசாம் மாநிலத்தின் சில்சார் நகரையும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரத்தையும் சாலைகள் இணைக்கிறது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் மாநில பேருந்து மூலம் குவஹாத்தி, சில்சார், துரா போன்ற நகரங்கள் பேருந்து சேவை உள்ளன.
தொடருந்து
ஷில்லாங் நகரத்தின் மெண்டிபதர் தொடருந்து நிலையம், 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. மெண்டிபதார் ரயில் நிலையம் மேகாலயா மாநிலத்தில் உள்ளது
விமான நிலையம்
ஷில்லாங் விமான நிலையம் மூலம் வானூர்திகள் கொல்கத்தா நகரத்துடன் வான் வழியாக இணைக்கிறது.
பொருளாதாரம்
மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. இங்கு பழத்தோட்டங்கள், மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. பிரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது.